தமிழ்நாடு பள்ளிகளில் உணவுத் திட்டம் என்பது 1920 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டது. 1920ல் நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்த சர் பி.டி. தியாகராயர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இலவச உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். இதர மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் இது விரிவாக்கப்பட்டாலும், நிதி நெருக்கடி காரணமாக கைவிடப்பட்டது. 1956ல் முதலமைச்சராக இருந்த காமராஜர் இத்திட்டத்திற்கு புத்துயிர் அளித்தார். எட்டயபுரத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது குழந்தைகள் பசியால் பள்ளியை விட்டு விலகுவதைக் கண்டு, மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 'மதிய உணவுத் திட்டம்' கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் கிராமப்புறங்களில் பள்ளிச் சேர்க்கையை கணிசமாக உயர்த்தியது. 1982 (ஜூலை 1)ல் முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) இத்திட்டத்தை "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்" என மாற்றி விரிவுபடுத்தினார். அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்டது. 1989ல் முதலமைச்சர் மு. கருணாநிதி சத்துணவுத் திட்டத்தில் வாரம் ஒருமுறை முட்டை வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார் (பின்னர் இது வாரத்திற்கு 5 முட்டைகளாக உயர்த்தப்பட்டது). 2013ல் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா கலவைச் சாதம் (Variety Rice) மற்றும் காய்கறி வகைகளைச் சேர்த்து உணவின் தரத்தை மேலும் உயர்த்தினார். 2022 செப்டம்பர் 15ல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை" மதுரையில் தொடங்கி வைத்தார். காலை நேரத்தில் மாணவர்கள் பசியின்றிப் பாடங்களைக் கவனிக்க இத்திட்டம் பெருமளவில் உதவுகிறது. தற்போது 2026ல் "முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்" என்ற பெயரை "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என்று மாற்றி முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் ஆணையை வெளியிட்டார். தமிழ்நாட்டின் வெற்றியைக் கண்டு, 1995-இல் இந்திய அரசு இத்திட்டத்தை நாடு முழுவதும் "தேசிய ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம்" (National Programme of Nutritional Support to Primary Education) என்ற பெயரில் அமல்படுத்தியது. 2001ல் இந்திய உச்ச நீதிமன்றம் அனைத்து மாநில அரசுகளும் சமைத்த மதிய உணவை அரசுப் பள்ளிகளில் கட்டாயம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. தற்போது இது PM POSHAN (பிரதம மந்திரி போஷான்) என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.